“எது புனிதம்”-லதாசரவணன்

 “எது புனிதம்”

இணையங்கள் இரங்கல் பல்லக்கினை, வார்த்தை தூக்கிகள் மூலம் சுமந்து அலைந்தது, கோவில் யானை லட்சுமியின் மறைவிற்கு ! யானை இறந்தாலும் ஆயிரம் பொன் ! என்ற சொல்லை அவளின் மறைவுக்கு போடப்பட்ட லைக்குகளும், கமெண்டுகளும் வைரலாகி நிரூபித்தன.
“# RIP LAKSHMI
ஷேஸ்டேக்குகள் இணையத்தின் வழி அவளின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டது.

 

அரசியல்வாதிகள், ஊரில் முக்கியப் பிரமுகர்கள், ஏன் சில சினிமாக்காரர்கள் கூட, தங்கள் முகத்திற்கு முன்னால்  நீண்ட போடியமற்ற ஒலிவாங்கியில்,  நீர் வராத கண்களை ஒற்றிக் கொண்டு வருத்தம் தெரிவித்தனர்…!

 யாருமற்ற அமைதியான ஒரு உலகிற்கு தயாராகிக் கொண்டிருந்த லட்சுமியின் உடலை,  கேமிரா எறும்புகள் தங்கள் வெளிச்சப் பசிக்காக மொய்த்துக் கொண்டு இருந்தது. அடர் சிகப்பு நிற கோடுகள் ஓடிய மஞ்சள் பட்டு துணி,   லட்சுமியின் உடலை பாதி மறைத்தும், மறைக்காமலும் போர்த்தியிருக்க, “இந்த தினத்தின் கணத்தை அறிந்திருந்ததாலோ என்னவோ ?”  அவள் கால் கொலுசின் பிடியில் இருந்து முத்துக்கள் முன்னமே உதிர்ந்து தற்கொலை செய்திருந்தது!.

 கூட்டம் அதிகமாயிட்டே இருக்கு ! வாசற்பக்கம் மக்கள் வெள்ளம் . அனைவரின் கண்களிலும் கண்ணீரும்,  “விரல்களில் மொபைல் போனும், தன் ஆறு இன்ஞ் கேமிராவில், லட்சுமியின் இறுதி ஊர்வலத்தை அடைத்துக் கொள்ளத் துடிக்கும் அவலத்தின் நடுவில் துளியூண்டு மனிதநேயமும் இருக்கத்தான் செய்தது !”.

“குருவா….?!” “பாகனின் அருகில் வந்தார் கோவில் தர்மகர்த்தா….!” “இந்தாடா இந்த வருஷம் கோவில் கொடைக்கு லட்சுமிக்கு போட வாங்கிட்டு வந்த புது கொலுசு. காலுலே போட்டு விடு…!” என்று அவன் கரங்களில் திணித்துவிட்டு, யாரோ முக்கியப் பிரமுகர் வர அவர்களை வரவேற்க வாசற்பக்கம் ஓடினார்.

 குருவனின் அங்குசம் கூட சக்தியற்றுதான் இருந்தது அவனைப் போலவே, “கசங்கிய சற்றே கிழிசலுக்கு வெள்ளை நூலை ஆபரணமாய் தரித்த அந்த சட்டை முழுவதும் மஞ்சள் ஒளிகள்.” “ நீண்ட கேவல்களும், முதுகு குலுங்களையும் துல்லியமாய் சுருட்டிக் கொள்ளும் வியாபார தந்திரங்கள். இத்தனை நாள் உயிரும், உடலுமாய் நின்றிருந்த லட்சுமி, இப்போது பிரகஞ்சையற்று ஆன்மா தொலைத்து படுத்திருப்பதை கண்டும், புன்னகையுடன் பிள்ளையாரின் சிரிப்பு ?!”. “இது எனக்கு புதிதில்லை என்பதைப் போல!”.

 அவள் நின்றிருந்த இடமும், வேண்டுமென்றே புழுதியைத் தன்மேல் தூவி, தண்ணீரில் இறங்க செய்யும் குறும்பும், எதை மறக்க……! லட்சுமியின் கணம் வாய்ந்த தும்பிக்கையை பற்றியபடியே குருவன் நின்றிருந்தான். இதே தும்பிக்கையை ஆதூரமாய் பற்றிய தினம் அவன் நினைவில் வந்தது.

 “குருவா …..! தினசரி காலையிலே லட்சுமியை நடைப்பயிற்சிக்கு கூட்டிப்போ?!”. கையில் தடிமனான சிரிஞ்சியுடன் லட்சுமியின் உடலில் மருந்தை செலுத்தியபடியே, மருத்துவர் சொன்னார்.

 “அய்யா எதுக்குங்க ?! கோவிலைச் சுத்தி நடக்கணுன்னா …!
கஷ்டமுங்க… ?! அதிலேயும் லட்சுமி லட்சுமின்னு பொட்டுப் பொடிசுங்க ரோட்ல நடக்க விடாதுங்களே ?!”

 “மேற்கால ஏக்கரா கணக்கிலே கோவில் சொத்து இருக்கில்லே ?, அங்கே கூட்டிப்போ….! நிலம் செழிக்கும் !”. அவன் புரியாமல் தலையசைக்க, குருவனின் தோளில் கை போட்டபடியே,

குருவா…..யானைகளுக்கு உணவை கரைச்சி கொடுக்கிறதில்லை, கவளம் கவளமா கொடுக்கிறோம். ரோட்டோரத்தில் ஆடு மாடு அசை போட்டு பார்த்திருக்கியா ?” அவன் தலையசைத்தான். “எங்கேயாவது யானை அசை போட்டு பார்த்து இருக்கியா ?”

 “இல்லீங்க…?!”

 “நீ மனுஷன் உன் வயசுக்கு சாப்பிட்டு நாலு நடை நடந்தா, அது ஜீரணமாயிடும். ஆனா பழம், காய்கறி, சோறுன்னு எத்தனையை பிசைஞ்சி அதுக்கு கவளமா தர்றே ? முழுங்கிற அத்தனையும் அதுக்கு ஜீரணமாக வேண்டாமா ? அதுக்குத்தான் நடக்கச் சொல்றேன்!”. “குறைஞ்சது ஒரு நாளைக்கு இரண்டு மணி நேரமாவது நடக்கணும். அப்படி நடக்கும் போது ஜீரணமாவதோடு, அதோட மலம் நிலத்துக்கு உரமாகவும் இருக்கும்”.

 “புரியலைங்களே ?!” குருவன் மீண்டும் தலையைச் சொறிந்தான்.

 “நீ கொடுக்கிற உணவு அனைத்தும் அது கழிக்கும் மலத்தின் மூலம் விதைகளாய் மண்ணில் புதையுன்னு சொல்றேன்!”.  “ரொம்ப யோசிக்காம நடக்க வை….!” என்று குருவனிடம் அன்று மருத்துவர் சொல்லிய தினத்தில் இருந்து, “ இந்த 27வருடங்களில் நடைபயிற்சி நிற்காமல் செல்கிறதே ?!”

 வழக்கம்போல அன்றும் நடைபயிற்சிக்கு அழைத்துப் போக அழைக்க, “எப்போதும் அந்த ஜிலீர் காலைக் காற்றினை உள்ளிழுத்து, தன் பெரிய உடலைக் குறுக்கி சிறுபிள்ளையாய் குதித்து வரும் லட்சுமிமருண்ட பார்வையுடன் ஏதோ சொல்ல தவிப்பதைப் போல அவனைப் பற்றி இழுத்ததே ?” “ நிரந்தரமாக உன்னை விட்டுப் பிரியப்போகிறேன் என்று உணர்த்தவா என்னைப் பற்றி இழுத்தாய் ??!”  இதை அறியாமல் அன்பாய் பிடறி நீவி முத்தமிட்டேனே….! “பாவி ….நான்”.

 “பாகன் என்ற சொல்லுக்கே யானையின் உடல்பாகத்தில் ஒருவன்தான் என்று சொற்பொழிவிற்கு வந்த சாமி சொன்னாரே ?!” “ அப்படியானால் என்னையும் அல்லவா நீ அழைத்துப் போயிருக்க வேண்டும்?!”.

குருவனுக்கு காலையில் தன் கண் முன்னாலேயே வேரறுந்த மரமென விழுந்த லட்சுமியின் இறுதி நினைவுக்கு வந்தது. இடதுபுறம் கையில் அங்குசத்தினை அரைத்தொட்டியில் பிடித்திருந்தான். ஏனோ அதை லட்சுமியின் பக்கத்தில் வைக்க வேண்டும் போல தோன்றியது.

 “பாகனுக்கும்,யானைக்கும் ஒரு நல்ல நட்பு இருக்குன்னு சொல்லுவாங்க…?” “நாம அதிகமாக சில நாட்களுக்கு முன்னாடி வைரலான ஒரு போட்டோ பார்த்திருப்போம். யானையோட கால்பக்கத்தில் தன்னை மறந்து உறங்கும் பாகனின் புகைப்படம்!” “எத்தனை நம்பிக்கையிருந்தால் அப்படி உறங்குவார் ?!” என்று வியந்தோம். “அப்படித்தான் இந்த லட்சுமியின் பாகனும், லட்சுமியோட இறப்பு அவரை ரொம்பவே பாதித்து இருக்கு…! இதிலேயே அவர் யானையின் மேல் கொண்ட அன்பு தெரிகிறது.  “யானைக்கும் அந்த பிணைப்பு இருந்ததா ?!”

இதோ நீங்களே இந்த வீடியோவைப் பாருங்களேன்!”. தன் சட்டைப் பையில் சொருகி இருந்த மைக்கை கழட்டி, “ராஜூ!  பாகன் கூட யானை விளையாடிச்சே அந்த வீடீயோவை என் வாட்ஸ் அப்பில் அனுப்பியிருக்கிறேன்.  அதை உடனே அப்லோடு பண்ணச்சொல்லு சேனல்லே…?!” என்று கேமிரா கோணத்திற்கு மறைந்து கொண்டு குரல் கொடுத்தாள் அந்த செய்தியாளப் பெண்.

 குருவன் விரக்தியாய் சிரித்தான்.  “உனக்கு என்ன தெரியும் ? அவள் என்மேல் கொண்ட அன்பை தன் இறப்பில் கூட நிரூபித்தாள் என்று….!” “உயிர் பிரியும் அந்நிலையிலும் வலப்பக்கம் சாய்ந்தால் என் உயிர் பிரிந்துவிடும் என்று நினைத்து,  “லட்சுமி என்னம்மா ?”  என்ற கேள்விக்கு தடுமாறி சட்டென்று, இடப்பக்கம் சாய்ந்தாளே….. !” “அந்த அன்பினை நான் என்ன சொல்வேன்” .  “இதைவிடவா….?!” “ அவள் எனக்கு உணர்த்தி விடப்போகிறாள் தன் அன்பையும் பாசத்தையும்….?!”

 “நெற்றியில் நீரும் குங்குமம் மணக்க மணக்க காலில் வெள்ளிக் கொலுசு சப்திக்க, தன் முகத்தில் ஒரு மலர்ச்சியை லட்சுமி தேக்கி வைத்து, நாளின் துவக்கமென விநாயகரை பூஜித்து, அதன் பின் பக்தர்களுக்காக காத்திருப்பதும். சிறு பிள்ளைகள் வந்துவிட்டால், தானே பிள்ளையாய் மாறி குதூகலிப்பதும்….?!”

“அவர்கள் தன் உருவத்தை கண்டு பயந்து தந்தை, தாயின் பின்னால் ஒளியும் போது,  “குருவா அந்த பயத்தைப் போக்கேன்.”  என்று தன்னைக் குறிப்பாய் பார்த்து உணர்த்துவதும்,  என எத்தனையெத்தனை அசைவுகள் !  “மூடியிருக்கும் அந்த கண்களின் சிநேகப் பார்வை இனி கிட்டவே போவதில்லையோ ?!”

 “அலைமோதும் இத்தனைக் கூட்டத்தை கண்டால் எப்படி குதூகலிப்பாய். அந்த வரிசையில் பார். நாள்கிழமை தவறாமல் தன் அம்மாவுடன் கோவிலுக்கு வரும் அந்த பிள்ளை லட்சுமி எழுந்திரு என்று அழைத்து வாழைப்பழம் ஊட்டுமே அதன் அழுகுரல் உன் காதில்
கேட்கவில்லையா ?!”

“குருவா……சடங்குக்கு ஏற்பாடு செய்….!” “ எந்த பெண் யானைக்கு தந்தம் இருக்கு, நம்ம லட்சுமிக்கு இருக்கே…!”  “அவ அம்பாளின் அவதாரம் அதனால புனிதமான இந்த கோவில் தோட்டத்திலேயே அவளோட உடலை புதைத்து விடலாம்!”  என்ற குருவனை எழுப்பினார்கள். விடை பெற முடியாமல் அந்த தும்பிக்கையின் பிடியில் இருந்து விலகினான் குருவன்.

 “தன் பருத்த உடலின் செயற்கை கனம் இழந்த லட்சுமியின் ஆன்மா, அத்தனை வேடிக்கைகளையும் எதிரில் அமர்ந்து பார்த்தது. காலில் பிணைத்திருந்த சங்கிலி இப்போது இல்லை…!” “முகத்தில் எந்த அடையாளமும் இல்லை, சுதந்திரக் காற்றை சுவாசிக்க விடாமல் தடுக்கும் பட்டுடுத்துணி அவளைத் தழுவவில்லை !” .

 “புனிதம் ! என்ற வார்த்தை,  அவளின் ஆன்மாவை மீண்டும் சீண்டியிருக்க வேண்டும்!”. “ எது புனிதம் ?”  என்ற கேள்விக்கு இதுவரையில் இவர்களுக்கு பதில் தெரியவில்லையோ?”  என்று யோசிக்க வைத்திருக்க வேண்டும்.  “27 வருடத்தில் இந்த கோவிலின் ஒவ்வொரு செங்கலும், மண்ணும் கூட லட்சுமிக்கு அத்துப்படி !” “ அதற்குள் எங்காவது ஒளித்து வைத்திருக்கிறார்களா இவர்களின் புனிதத்தை ?!”

 “என்ன இது ? “ என்று ஆராயும் பார்வையோடும், “நான் போ மாட்டேன் ?!” என்று பயத்தோடும் வெளிறி வரும் பிள்ளையைப் போலத்தானே தானும் இந்த இடத்தில் முதலில் நின்றேன்!” . குருவனின் அங்குசத்திற்கு பயந்து , “என்ஜான் உடலைக் குறுக்கி அப்பப்பா…..!” “ அதையாடா புனிதம் என்கிறீர்கள் ?”  அல்லதுசந்தனமும் ஜவ்வாதும் மணக்க பட்டுடுத்தி அலங்கரித்து,  என் முதுகில் சவாரி செய்யக் காத்திருக்கும் மூலவருக்கென, அந்த ஒற்றை தினத்திற்கென என் “27” வருட வாழ்வின் இச்சையினை இழந்து கிடந்தேனே ? அதுவா…?”

 “மங்கல கோவில் மணியைத் தாண்டிய என் அர்த்த ஜாம பிளிறல்களுக்கு என்றாவது உங்களுக்கு அர்த்தம் புரிந்திருக்கிறதா ?” லட்சுமியின் ஆன்மா இறந்து கிடந்த உடலின் விழிகளை நோக்கிப் போனது. “இதே போல ஒருமுறை தெளிவில்லாத ஒரு கனவென தன்னை போலவே, ஆனால் சற்றே நெடிய அந்த உருவம், பயப்பொழுதில் தும்பிக்கையின் கருமுடிகளின் மெல்லிய குத்தலோடு அணைத்துக் கொள்வதும், அதன் நிழலில் நடைபயில கற்றுக் கொடுத்ததும்…!”

 “அரை மயக்கத்தில் கண்கள் செருகிய நிலையில் பாம்பினைப் போல, வேகமாய் வளைந்து வளைந்து,  போகக் கூடிய வாகனத்தில்  “தான் வலுக்கட்டாயமாய்” ஏற்றப்பட, “அந்நெடிய உருவம் என்னைப் பற்றிக் கொள்ள தவித்து தன் பருத்த உடலை தூக்கி ஓடி வந்ததே ?!”.

 “வறண்ட சாலையின் வெப்பம் தாளாமல்,  பாதம் அழுந்ததட்…. தட்….” என்ற ஒலியோடு, பிளிறிதன் இயலாமையை ஏற்றுக் கொள்ள மறுத்து மடங்கி விழுந்ததை கண்டு அழுந்த மூடியதே லட்சுமியின் விழிகள்….” அதைப் போலத்தான் இப்போதும். என் முதல் இறப்பு அந்நெடிய உருவத்தின் பிடியில் இருந்து விலகிய போதே ஆரம்பித்துவிட்டது.

 “உடலிற்கு ஒருமுறை எனின் இறப்பில்லை எனக்கு ?!”  என்று மார்த்தட்டிக் கொள்ளும்ஆன்மாவிற்கு பலமுறைகள் இறப்புண்டு என்பது என்வரையில் உண்மை!”.

 “இந்தா இன்னைக்கு ஒரு ஆனைக்குட்டி. அப்பறம் ஒரு முயலுதான் கிடைச்சது.!” “ சின்னவன் நோவுக்கு முயல் ரத்தம் நல்ல மருந்துன்னு சொன்னியே ? தேச்சுவுடு ?!”  “ ஆனையை மயக்கத்தில இருக்கும்போதே தோப்புல விடச்சொல்லு, அப்பத்தான் புழக்கத்துக்கு ஆவும். இல்லைன்னா உக்கிரப்படும் !”.

 “பேச்சு முடித்து, “ வா…!” என்று அழைப்பில்,  அந்தக் கணவன் மனைவிக்கான ஊடல் அபிலாஷைகளைக் கடந்தது மசமசப்பான நினைவுகளாய்.”

 “அயர்ச்சியாய்… ! நான்கைந்து முறை மூடித்திறந்த விழிகளில் என் எதிர்பாலினன்!”.  “அந்நெடிய உருவத்தின் அதே சாயலில்…!”

எதிர்பாலின ஈர்ப்பின் தாக்கம் இருவருரிடத்திலும், 4வருடங்கள் நீயின்றி நானில்லை என்பதைப் போன்ற உணர்வு”.

 “சளசளக்கும் ஆற்று நீரில் என்னை நனைப்பதற்காகவே, புழுதியை தெளிப்பான். பின் வெய்யிலின் தீண்டலில் மினுமினுக்கும் என் கறுநிற தேகத்தை துளைக்கும் அவன் பார்வையில் தரை தாழ்ந்து கொள்வேன்!”. “உடைகளற்ற அந்த உடலின் நிர்வாணத்தை ரசிக்கும் அவன். பட்டும் படாமல் உரசிக்கொண்டு, கவளங்களையும், சோளங்களையும் விழுங்க மறுத்த நேரங்களில் ஆறுதலாய் நானிருக்கிறேன்!”  என்று தன் சாம்பல் நிற கண்களால் உணர்த்திய அது ?!” “ அது புனிதமில்லையா ….?!”

 “வேண்டாமென்ற தலையசைப்பில்,  புதுதாலி மெருகு குலையாமல் யானைதானே ?! பயப்படாதே நானிருக்கிறேன் !” என்று மனைவியின் இடை அணைக்க, இதுதான் சாக்கென்றுஎன் மேல் பயமென்னும் பொய் வேடம் புணைந்த அவளும் உரசியும் உரசாமலும் இணைந்தாளே!?”.

என்னிடம் ஆசி பெற வரும் புதுமணத் தம்பதியினை ஆசீர்வதிக்கும் போது என்னில் அவளையும், அவனில் ….. !” “நான் தொலைத்த அவனையும் கற்பனை செய்தேனே ?”  “அப்போதே கெட்டுப் போகவில்லையா என் புனிதம் எதை இழந்தேன்?” என்றுஇன்னமும் புரியவில்லையா ?” “ உங்களுக்கும் ?!”

“மெல்லிய நூலிலையில் இணைந்த உங்கள் சுயநலத்திற்கென அறுந்த அந்த காதலை சந்தித்தேன். அந்த கனம்தான் என்னை வீழ்த்தியது!”.

 “என்னைக் கண்டதும் குதூகலித்தாலும் சற்றே மருண்ட பார்வையுடன் பெற்றவர்களின் விரல் பற்றி தள்ளி நிற்கும் பிள்ளைகளும் நாளும் கிழமையுமாய் கோவிலுக்கு வரும் பக்தர்களும் அவர்களின் மரியாதைப் பார்வைகளையே சந்தித்த என் விழிகள் அவனைக் கண்டதே !”

 “என் ஏக்கத்தின் வடிகாலைக் கண்ட கனம் போதுமே !” “நீங்கள் போர்த்திய புனிதம் !” என்னும்போர்வைக்குள் சுருண்டிருந்த அணலை மீண்டும் தகிக்க தாங்க முடியாமல் நானே மாய்த்துக் கொண்டேன்!”. “இப்போதும் என் ஆன்மா இறந்து பிழைத்துக் கொண்டது. உங்கள் புனிதத்தைப் பார்த்து எகத்தாளமாய் சிரிக்கிறது !”.

 “தேர் சுமந்த மூலவரின் முன்னால், நான் நடக்க என் ஐம்புலன்களும் விழித்துக் கொண்டதே…?” “ நீ தேடிய நான் இருக்கிறேன்!”  என்றுஅந்த வெப்ப மூச்சுக்காற்றின் ஸ்வாசம் ! என் நாசியினைத் தீண்டிட, நீ புனிதம் என வடிக்கும் கற்பூரம் ஜவ்வாது மணத்தை தாண்டியும் வியர்வையற்ற அவன் வாசம்!”. “என் பெண்மை உணரவைத்த அந்த கண்களை நான் கண்டேனே…..!?”

 “என் இடப்புறத்தில் சர்க்கஸ் கம்பெனியின் விளம்பரத்திற்காய் நிறுத்தி வைக்கப்பட்ட அந்த உருவம் தற்போது சற்றே வளர்ந்திருந்தது. பளபளக்கும் உடையணிந்து விளம்பர பொம்மையைப் போல அதுவும்!”.

 “என் வாசனையை அவனும் உணர்ந்திருக்கிறான்!”. “உணர்ச்சியைப் பறித்த மூலவர் “ உணர்த்தலை” எங்களுக்கு அளித்திருக்கிறார். அதே அரைக்கண் மயக்கத்தில்….!”

 “சீக்கிரம் வண்டியிலே ஏத்துங்களடா….!” “அவன் முரடன் கண்ணு முழிச்சா அவ்ளோதான். வண்டியை பூட்டும் சப்தம். தொலைதூரம் டயர்கள் தேயும் சப்தம் கூடவே எங்கள் தொடர்பும்!”.  “விழித்தால் நான் இங்கேஎன் முன்னே பட்டும், விபூதித்தட்டுமாய் நீ……! “ “நீயென்றால்….?!” “அப்போது என் அவன் ?”  எப்படி தேடினேன் ?!”

“அன்று பூட்டிய சங்கலி என் இளமைக்கும் சேர்த்துத்தான். புனிதப் பெட்டிக்குள் அடைபட்ட பிணமாய் !”

 “எங்கள் கண்கள் சந்தித்த நேரம்!”. “கற்பூர ஆரத்தியின் ஒளியில்….!” “கையெடுத்தும் கும்பிடும் இடத்தில் நான்….!” “அலங்கரிக்கப்பட்ட அவன் வாலையும், தும்பிக்கையும் பார்த்து பரிகசிக்கும் பிள்ளைக் கூட்டத்தில் அவன்…. !” “ஆசீர்வதிக்க மேல்தூக்கிய என் கரங்கள் !” “ அவனை அணைத்துக் கொள்ள துடிப்பதை நான் எப்படி புரிய வைப்பேன் குருவா…..!” “அய்​யோ யாரிடம்​சொல்​வேன் ?”

“என்​னை வணங்கும் இந்த ​கைக​ளை ​வெறுக்கி​றேன். கடவுளாய் பார்க்கும் இவர்களின் கண்க​ளை நான் சத்தியமாய் ​வெறுக்கி​றேன்!”

 “அய்யோ…..!” என்ற ஒலியுடன்,  “லட்சுமி !” “அவர்கள் குறிப்பிட்ட புனித இறுதியிடத்திற்குப் போகிறாள் !”  ஆனால் அவளின் சிறைபடுத்தப்படாத ஆன்மா !  தான் உணர்ந்த அந்த புனிதத்தை நோக்கிப் பயணிப்பதை அவர்கள் அறியவில்லை !”

 “லட்சுமியும் அறியாத செய்தி ஒன்றை உங்களுக்கு சொல்லவா ?”  “பிரிவின் கனம் தாளாமல் அந்த நெடிய உருவமும்,  தன் இதயத் துடிப்பை நிறுத்திக் கொண்டது!”

 

 “என்ன டாக்டர் ஆச்சு ?!” “ நேத்து கூட சர்க்கஸ்லே விளையாட்டு காட்டினானே ?”  சர்க்கஸ் முதலாளி தன் வருமானம் போச்சே ? என்ற வருத்தத்துடன்!”.

 “பொதுவாகவே யானைகளுக்கு அன் பேலன்ஸ் இதயம் அதனால அவங்களுக்கு “ஹார்ட் அட்டாக்” மிகவும் சுலபமா தாக்கிடும்?!”. “நம்ம கையில் என்ன இருக்கு ?” “ஆக வேண்டியதைப் பாருங்க ?!”  என்று சொல்லி தன் பாக்கெட்டை நிரப்பிக் கொண்டு அவர் நகர்ந்தார்.

 “புற அணைப்பினைத் துறந்த இரண்டு ஆன்மாக்கள்” “தங்கள் அக அணைப்பில்,  இணையச் செல்கிறார்கள் !”.

இனியும் அவர்களை புனிதம்!”  என்றவட்டத்திற்குள் அடக்காமல் அடங்காத காதலில் பிணைப்போம் ?”!.

 

லதாசரவணன்

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தொடர்புடையை மற்ற பதிவுகள்:

சுட்டால் தொடரும்… | பட்டுக்கோட்டை பிரபாகர்

‘‘சிம்பிள்.. சொல்யூஷன் என்ன சொல்றே ?’’ கேட்டுவிட்டு பரத் காத்திருக்க…. வெண்ணிலா உதடுகளை ஒருமுறை ஈரம் செய்து கொண்டு சின்ன தயக்கத்திற்குப் பிறகு ‘‘பரத்….’’ என்று ஆரம்பித்தாள். படிக்க… Read More…  

Read More »

இப்படித்தான் ரெடியாகிறது.! – ஸ்வர்ண ரம்யா

‘‘உன் மேல எறியப்படுகிற கல்லை மைல் கல்லா மாத்துன்னு ஆங்கிலத்துல சொன்ன கிரிக்கெட் வீரர் யாருன்னு தெரியுமா ?’’   ‘‘காட் ஆப் கிரிக்கெட்ன்னு கொண்டாடப்படுகிறவர்தான் அவர்’’   ஆன்லைன் அலப்பறைகளில் ஒரு கிரிக்கெட்

Read More »

ப்ரியங்களுடன்  பிரபாகர் அவர்களின் பதில் என்ன ?

பெண்ணின் மனோபலத்தின் முன் ஆணின் மனோபலம் தோற்று விடுகிறதே…? – மதுரை முருகேசன் அவர்களின் கேள்விக்கு… ப்ரியங்களுடன்  பிரபாகர் அவர்களின் பதில் என்னவாக இருக்கும் ? படிக்க… Read More…

Read More »
Tariff2
SSS
Side Advt 2